தகை சான்ற சொல்லினராய்....  - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

எனது பால்ய சிநேகிதி ஒருத்தி. சதா குறும்பு செய்து தொந்தரவு அளிக்கும்  தனது சகோதரனை  தனது தாயார் கோபத்தில்  ""அடேய்... நாசமற்றுப் போறவனே'' என

எனது பால்ய சிநேகிதி ஒருத்தி. சதா குறும்பு செய்து தொந்தரவு அளிக்கும்  தனது சகோதரனை  தனது தாயார் கோபத்தில்  ""அடேய்... நாசமற்றுப் போறவனே'' என திட்டுவார்கள் என்று சொல்லுவாள்,  கோபத்தில் மகனைத் திட்டும் அந்த தாய் தனது ஆற்றாமையிலும் ""நாசம் அற்று''  என வார்த்தைப் பிரயோகம் செய்வதை கவனிக்க வேண்டும், இதைக் குறிப்பிடுகையில்  இன்னொரு சம்பவம் பற்றியும் சொல்ல நேரிடுகிறது.

1996-இல் நடந்தது இது... தேர்தல்  சமயம் அது...  பாராளுமன்ற உறுப்பினரின் மகனை ஒரு கிராமத்தினர் கடத்தி வைத்துக்கொண்டு  விட்டார்கள்.  தனது தகப்பனார் சார்ந்த கட்சிக்கும் அதன் எதிர்கட்சிக்கும் கடும் போராட்டம் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அக்கிராமத்தினை அடுத்த கிராமத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பின்பேரில் பிரச்னை குறித்து சிறிதும் யோசிக்காமல் கடமையே கண்ணாக மருத்துவம் பார்க்கச் சென்றிருக்கிறார்  எம்.பி.யின் மருத்துவர் மகன்.   மாவட்டத்தில் வேறெங்கோ ஒரு கல்வீச்சு சம்பவம்  நடக்க, அச்சமயத்தில் தங்கள்  கிராமத்திற்கு வாகாக வந்து சேர்ந்த மருத்துவரை  எம்.பியின் மகன் என்று தெரிந்தே வழி மறித்து  வண்டியில் இருந்து இறக்கி, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டனர்.  அவரது மாருதி காரின் டயர்களையும் கழற்றி விட்டு விட்டனர். 

எம்.பியின் மகன் கடத்தப்பட்ட செய்தி மாவட்டம் முழுதும் பரவிற்று. பிறகென்ன ஆர்.டி.ஓ... நான்தான்... அங்கு ஆஜரானேன்.

எம்.பியின் மகன் பிடித்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கிராமத்திற்கு சென்றோம்.  எங்களை கிராமத்தினுள் நுழைய விடாமல் ஒரு கூட்டம் தடுத்தது.  அதில் பெரும்பான்மையாக பெண்கள். அவர்களிடம் நான் பேச ஆரம்பித்தேன். "இது தவறு'  என்று சொன்னேன்.   "எம்.பியின் மகனுக்கும் தேர்தல் குறித்த பிரச்னைகளுக்கும் தொடர்பில்லை,  அவர் ஒரு மருத்துவர்.  அவரை அடைத்து வைப்பது சட்ட விரோதம்'' என விளக்கினேன். அவரை  உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டேன். 

அப்போது கூட்டத்தில் ஒரு பெண் பெருங்குரலெடுத்து  ஒப்பாரி வைக்கத்  தொடங்கினார்,  அழுகையும், கோபமும் கலந்த குரலில் என்னுடன் ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார்.    ""எதிர்தரப்பினர் எனது மகனைக் கொன்று, அவர்களின் ஊரில்  ஒரு மரத்தில் கட்டி  வைத்துள்ளார்களாம், நீங்கள் அவர்களைப் போய் கேட்காமல் இங்கே வந்து கேட்கிறீர்களே!  இது நியாயமா?'' ""ஐயோ... நான் பெற்ற மகனே... உன்னை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்களோ... உன்னை நான் இனிமேல் பார்ப்பேனோ'' என அவரது  ஒப்பாரி தொடர்ந்தது,  அந்த ஒப்பாரி அழுகையில் என்னுடைய பேச்சு எடுபடவில்லை,  அக்கூட்டத்துடன்  பேசினால்  ஒன்றும் ஆகப்போவதில்லை என அறிந்து  அங்கிருந்த குட்டித் தலைவர்கள் இரண்டு பேரை தனியே அழைத்து பேசினேன், என்னுடன் வந்திருந்த வட்டாட்சியரை அவர்கள் குறிப்பிட்ட ஊருக்குச் சென்று விசாரித்து வரச் சொன்னேன்.  காவல்துறையினர் மருத்துவரை தேடத் துவங்க, அவர்களோ அவரை இடம்  விட்டு இடம் மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.

ஒப்பாரி ஒருபுறம் தொடர, மூன்று மணி நேரம் நின்று கொண்டே அத்தலைவர்களிடம்  பேசிய பின்பு ஒருவழியாக அவர்கள் எம்.பியின்  மகனை ஒப்படைக்க ஒப்புக் கொண்டார்கள்.  இதற்குள் அடுத்த ஊருக்கு அனுப்பப்பட்ட வட்டாட்சியரும் வந்து விட்டார்.  அவர் என்னை தனியே அழைத்து,  ""அந்த ஒப்பாரிப் பெண் சொல்வது போலான எந்தவொரு சம்பவமும்  அவ்வூரில் நடந்ததாகத் தெரியவில்லை'' என்றார்.

உறுதியளித்தது போலவே எம்.பியின் மருத்துவர் மகனை அழைத்து வந்து என்னிடம் கிராமத்தினர் ஒப்படைத்தனர்.  நான் அவரை எனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஒரு பிரதான இடத்தில் தன் மகனுக்காகக் காத்திருந்த வயதான அந்த எம்.பியிடம் கொண்டு வந்து விட்டேன்.  எம்.பியின் கண்களில் நீர் வழிந்தோடியது. அவர் மகனை நான் காப்பாற்றிக் கொண்டு வந்ததாக நன்றியுரைத்தார்.  நாற்பது வயது நிரம்பிய தனது மகன் மீண்டும் பிறந்து வந்தது போல் உணர்ச்சி வசப்பட்டார்.

அவரை ஆறுதல்படுத்தி விட்டு நான் மீண்டும் அந்த "பிரச்னை கிராமத்து'க்குச் சென்றேன்,   மகனைக் காணாது புலம்பிய அந்த தாயைப் பார்க்க வேண்டுமே! இப்போது அக்கிராமத்தில் கூட்டம் இல்லை.  ஒப்பாரியும் இல்லை.  ஏதோ சாதித்து விட்ட மகிழ்ச்சிதான் ஆங்காங் கே நின்றவர்களின் முகங்களில் தெரிந்தது. குட்டித் தலைவர்களில் ஒருவரை அழைத்து கேட்டேன்:  ""ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த அந்தப்பெண் எங்கே?'' சிரித்துக்கொண்டே அவர் சொன்னார்: ""அவர் வீட்டிற்கு சென்று விட்டார். அவர் மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை. இது ஒரு ஏற்பாடுதான்.  சொல்லப்போனால் அவர் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கையில் அவரது ஒரே மகன் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டு தனது தாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்''.

உங்களுக்கு இப்போது வருவது போல் எனக்கும் எனது பால்ய  சிநேகிதியின்  தாயார்  நினைவுக்கு வந்தார்.  கோபமாகத் திட்டினாலும் அக்கோப வார்த்தைகள் தன் மகனை பாதித்து விடக்கூடாது என்பதற்காக ""நாசமற்றுப் போறவனே'' என திட்டிய ஒரு தாய் ...  கூட்ட மனோபாவத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு, உயிருடனிருக்கும் தனது மகனுக்கு ஒப்பாரி பாடிய இன்னொரு தாய்... இவர்களின் மகன்களில்  எந்த மகன் தனது தாயை மதிப்பான்? வயோதிக காலத்தில் சோறூட்டுவான்?

குழந்தைகளின் முதல் ஆசிரியை "தாய்'  என்பதால் அவளின்  ஆதிக்கம்  அவர்களிடம் கடைசி வரை இருக்கும்,  ""தாயைப்போல் பிள்ளை''  என்பதும் இதனால்தான். எழுதப்படாத குறுந்தகடுகளாகப் பிறக்கும்  குழந்தைகளுக்கு முதல் மொழி  சொல்லித்தரும் தாய்,  அத்தகடுகளில்  நேர்மையானதும் உண்மையானதுமான  நன்மொழியையே  எழுத வேண்டும்.  இன்னாதவை தள்ளி  இனியவையை ஏற்ற வேண்டும்,  சிறு வயதிலேயே இன்னாதவை எழுதப்பட்டு வந்தால் குழந்தைகள் பிற்காலத்தில் தாங்களே விரும்பினாலும் மாற்றிக்கொள்ள முடியாத ‘Read Only' தகடுகளாகிவிடும் நிலை ஏற்பட்டு விடும்.

சொல், வாக்கு, செயல்களில் தனது தாயைப் பிரதியெடுக்க ஆரம்பிக்கின்றன நம் குழந்தைகள்.  எனவே பிரதியெடுக்கப்படும்  "பிரதான சான்று'  பிழையின்றி  இருக்க வேண்டும். குழந்தைகளின் முதல் 'தகவல் தொடர்பு' ஆன தாய்மொழியை அவர்கள் இனியன மட்டுமே கொண்டதாகப் பெற்றுக் கொண்டு இச் சமூகத்தில் இணக்கத்துடன் கூடியதான நிறை வாழ்க்கையை வாழ வகை செய்யும் வழியில் நாம் 'தகை சான்றை சொல்லினராய்' எப்போதும் இருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com